அணிந்துரை - ச.தமிழ்ச்செல்வன்
- Book reviews
- April 19, 2023

பிரதீபா சந்திரமோகனின் “இந்திர நீலமும் இமைக்கா இரவுகளும்” என்கிற இந்நாவல் முற்றிலும் வித்தியாசமான ஒரு புதிய முயற்சி. வாசிக்கத் துவங்கினால் கீழே வைக்க முடியாமல் சரசரவென நகர்கிறது கதை.
இன்று கீழடி, கொற்கை, சிவகளை அகழாய்வுகளும் ஆதிச்சநல்லூர் அகழாய்வு முடிவுகளும் தமிழ் மக்கள் மனங்களில் ஒரு பெருமித உணர்வையும் நம் முந்தைய வரலாற்றைத் தேடும் ஆர்வத்தையும் ஒருசேரக் கிளர்ந்தெழச்செய்துள்ளன. அக்கிளர்ச்சி அலையின் மீது பயணப்பட்டு வரும் கப்பலாக இந்நாவல் நம் கரை வந்து சேர்ந்திருக்கிறது. இதை ஒரு அறிவியல் புனைகதை என்பதா தொன்மங்களைத் தேடும் மாயா யதார்த்தக் கதை என்பதா என்கிற குழப்பம் எனக்குண்டு.
அனன்யா என்கிற தொல்லியல் ஆய்வாளார் கையில் ஒரு நீலநிறக்கல் –அதுவே இந்திர நீலம்- கிடைக்கிறது. அதை கடற்கரையில் அவரும் அவருடைய தோழியும் கண்டெடுக்கிறார்கள். அதைத் தூர எறியும்போது கடற்கரையில் விளையாடிக்கொண்டிருந்த இளைஞர்களில் ஒருவரின் நெற்றியைப் பதம் பார்க்கிறது. அந்த இளைஞர்தான் நாவலின் நாயகன் ஆதர்ஷ் எனப்படும் ஆதி.
தொடரும் அத்தியாயங்களில் ஆதிக்கும் அனன்யாவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. ஆய்வை முடித்து பி எச்டி பட்டம் பெற்ற பிறகுதான் திருமணம் என்பதில் அனு உறுதியாக இருக்கிறான். அதற்கு உதவி செய்கிறான் ஆதி. ஒரு கடலாய்வுக்குழுவின் கப்பலில் சேர்ந்து ஆய்வு செய்ய அவளுக்கு அனுமதி பெற்றுத்தருகிறான். இருவரும் அந்த ஆய்வுக்கப்பலில் பயணிக்கிறார்கள். ஆதியின் நண்பன் மித்ரனும் பயணத்தில் இணைகிறான். இவர்களின் காதலும் வளர்கிறது. கதையும் வளர்கிறது.
அனுவின் கையிலிருக்கும் அபூர்வக்கல்லான இந்திர நீலத்தை பௌர்ணமி நிலவொளியில் கையில் பற்றிக் கப்பலின் மேல் தளத்தில் ஜோடிகள் நிற்கும்போது அந்த அதிசயம் நிகழ்கிறது. ஆழிப்பேரலை வந்து தாக்க, அனு, ஆதி, மித்ரன் மூவரும் கடந்த காலத்துக்குள் தூக்கி எறியப்படுகிறார்கள். அந்த இந்திர நீலம் ஒரு கால யந்திரத்தின் வேலையைச் செய்துவிடுகிறது.
எந்தப் பூம்புகார் குறித்து அனன்யா ஆய்வு செய்ய விரும்பினாளோ அதே பூம்புகார் நகரத்தில்தான் இப்போது மூவரும் இருக்கிறார்கள். இளவரசன் உதயகுமாரன் மணிமேகலையை விரும்புகிறான். அதைத்தவிர்க்க மணீமேகலையின் தாய் மகளைத் துறவறம் பூணச்செய்கிறாள். புத்த விகாரையில் தவக்கோலத்தில் இருக்கும் மணிமேகலையை இம்மூவரும் சந்திக்கிறார்கள். உதயகுமாரனின் காதலை நிராகரிக்காதே அவனை ஏற்றுக்கொள் என்று அனன்யா மணிமேகலையிடம் பேசுகிறாள். அனன்யாவின் வார்த்தைகள் மணிமேகலையின் மனதைக் கரைக்கின்றன.
இதுதான் நாவலின் முக்கியமான திருப்புமுனை. வரலாறு மாறுகிறது, உதயகுமாரனும் மணிமேகலையும் தப்பித்து இமயமலைச் சாரலில் குடித்தனம் நடத்த்ப் போய்விடுகிறார்கள். சீத்தலைச்சாத்தனார் செய்த அநியாயத்தை இந்த நாவலில் நேர் செய்கிறார் பிரதீபா சந்திரமோகன்.
இந்திர நீலத்தின் மூலம் மீண்டும் ஆய்வுக்கப்பலுக்கே வந்து சேர்கிறார்கள். ஆனால் கப்பலில் கூட இருக்கும் நீல், கோதையின் தகப்பன், இந்த நீலக்கற்களைத் தேடித்தான் இந்த ஆய்வுக்கப்பலையே கொண்டுவந்துள்ளான் என்பது தெரிகிறது. அதன் பிறகு வணிக சினிமாவின் வில்லனாக நீல் அந்தக் கற்களை எடுத்து வராவிட்டால் அனன்யாவையும் இனியாவையும் கொன்று விடுவதாகக் கொக்கரிக்கிறான். அப்புறம் திரைப்படம் போல வேகவேகமாகக் காட்சிகள் நகர்கின்றன. இறுதியில் எல்லாம் சுபம்.
கருந்துளைகள் இரண்டு இணைந்தால் காலத்தை கடக்கலாம் என்கிற கருதுகோளை இந்திர நீலத்தில் ஏற்றி் இக்கதை புனையப்பட்டுள்ளது. இதெல்லாம் எவ்வளவு தூரம் சாத்தியம் என்பதை யாரேனும் அறிவியல் அறிஞர்கள்தாம் விளக்க வேண்டும்.
நாவல் வாசிக்கச் சுவையாகவும் விறுவிறுப்பாகவும் இருக்கிறது. ஒரு வித்தியாசமான கோணத்தில் கதை சொல்ல முயற்சித்திருக்கிறார். காதலைக் கொண்டாடியிருக்கிறார். அவரை வரவேற்போம். வாழ்த்துவோம்.
அன்புடன்
ச.தமிழ்ச்செல்வன்
சிவகாசி-626124
19-04-2023
#இந்திரநீலமும் #இமைக்காஇரவுகளும் #அணிந்துரை #தமிழ்ச்செல்வன் #புத்தகவிமர்சனம்