Writer Raghu Raman
- Book reviews
- April 23, 2023
பிரதீபா சந்திரமோகனின் முதல் நாவலான ‘#இந்திரநீலமும் #இமைக்கா #இரவுகளும்’ வாசித்தேன்.
வாசிக்கத் தொடங்கும்போது இதுவும் ஒரு வழக்கமான காதல் கதைதான் போலும் என்று சற்று பெரிய எதிர்பார்ப்பு எதுவுமில்லாமல் வாசிக்கத் தொடங்கினேன். ஆனால் இது பல திருப்பங்களும், மர்மங்களும் நிறைந்த ‘டைம் ட்ராவல்’ மற்றும் வரலாற்றை மாற்றிய காதல் கதை.
ஆசிரியரின் எழுத்து நடை ரசிக்கும்படியாக இருந்தது.
காதல் ரசத்துடன் ஆரம்பித்தது கதை. பல காதல் காட்சிகள், குறிப்பாக அந்த பெண்பார்க்கும் படலம் அழகு. ‘கல்லானாலும் கணவன்’ என்ற சொற்றொடர் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் இங்கு கல்லடி பட்டாலும் கணவன் என்று கதாநாயகி அனன்யாவை கரம் பிடிக்கத்துடிக்கும் கதாநாயகனாக ஆதர்ஷ்.
இப்படியான காதலால் அனன்யாவின் தொல்லியல் ஆராய்ச்சிக்கு உதவ முற்படுகிறான் ஆதர்ஷ். இன்னொரு புறம் இந்த காதல் ஜோடியையும் இவர்களது நண்பர்களையும் சூழ்ச்சி வலையில் சிக்கவைத்து தங்களுடைய நோக்கமான அரிய வகை ரத்தினக்கல்லான இந்திர நீலக்கல்லை அடைய நினைக்கிறது ஒரு கும்பல். இந்த சூழ்ச்சி கும்பலிடமிருந்து அந்த தொல்லியல் குழு தப்பித்ததா என்பதை பல சுவாரஸ்ய திருப்பங்களுடன் சொல்லியிருப்பதே இந்தக் கதை.
தன் கதையின் மூலம் வரலாற்றுச் சிறப்புமிக்க பழைய பூம்புகார் நகரை உயிர்பெறச் செய்திருக்கிறார் ஆசிரியர். அது மட்டுமல்ல காப்பிய கதைமாந்தர்களான மணிமேகலையையும் உதயகுமாரனையும் கதையில் இணைத்த விதம் அருமை.
பல சுவாரஸ்ய வரலாற்று தகவல்களை உள்ளடக்கியதாக இருக்கிறது இந்த நாவல்.
இந்தக் கதையை படித்தபின் சிலப்பதிகாரத்தையும், மணிமேகலையையும் நம்மை வாசிக்கத் தூண்டும்.
ஆசிரியரின் எழுத்துக்கள் பல இடங்களில் கவனம் ஈர்க்கிறது.
குறிப்பாக உதாரணத்திற்கு சில வரிகள்,
“நம்மால நம்ப முடியாத விஷயங்கள் உலகத்துல நிறைய இருக்கு. புரிஞ்சவன் அதை அறிவியல்ன்னு சொல்லி சோதனைக்குழாயில் போட்டு அலசுறான். புரியாதவன் அதை கடவுள்ன்னு சொல்லிட்டு கடந்து போயிடறான்…”
“ஆண்களுக்கு அழும் சுதந்திரத்தை இந்த சமூகம் ஒருபோதும் கொடுப்பதில்லை….”
இப்படியான வரிகள் சிலவற்றைச் சொல்லலாம்.
இந்தக் கதையை உருவாக்க ஆசிரியரின் மெனக்கெடல் மலைக்க வைக்கிறது. வரலாற்று புதினத்திலோ அல்லது வரலாறு குறித்தோ ஆர்வமுள்ளவர்கள் கண்டிப்பாக இந்த புத்தகத்தை வாசிக்கலாம். ஆசிரியரின் முதல் படைப்பு என்று நம்புவதற்கே சற்று கடினமாக இருக்கு. காரணம், எழுத்தில் நல்ல முதிர்ச்சி தெரிகிறது. கண்டிப்பாக வரும் காலத்தில் இந்த எழுத்தாளர் பேசப்படுவார். வாழ்த்துக்கள் 😊
#இந்திரநீலமும் #இமைக்காஇரவுகளும்