எழுத்தாளர் கற்பகாம்பாள் கண்ணதாசன்
- Book reviews
- April 24, 2023
#வாசிப்பனுபவம்
நூல்: இந்திர நீலமும் இமைக்கா இரவுகளும்
ஆசிரியர்: Pratheba C Vignesh
ஆசிரியரின் எழுத்து நடைக்கும், உழைப்பிற்கும் சிரம் தாழ்ந்த வணக்கங்கள். அபாரமான எழுத்து.
எப்போது ஒரு கதை வாசகனை நிகழ்காலத்தை மறக்கடித்து கதை நிகழ்விடத்திற்கு கூட்டிச்செல்கிறதோ, தன்னையே கதைமாந்தராக உணரவைக்கிறதோ அப்போதே அக்கதை வெற்றிபெற்று விடுகிறது. அந்த வகையில் இக்கதை மனதினை வென்றது.
என்னா ஒரு விறுவிறுப்பு, கசாட்டா ஐஸ்க்ரீம் சாப்டுக்கிட்டே த்ரில்லர் கோஸ்டர்ல போற மாதிரி, ஜில்லுன்னு காதல் காட்சிகள் அதை கொஞ்சமும் பாதிக்காத விறுவிறு சாகசங்கள்.
தமிழின் இரட்டை காப்பியங்களில் ஒன்றான மணிமேகலையின் காட்சிகளையும் நிகழ்வுகளையும் தொட்டுப் பார்க்க நினைப்பதற்கே ஒரு அசாத்திய துணிச்சல் வேண்டும். காலங்காலமாக வாசிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு வரலாறு, அதன் நிகழ்வுகளின் மீது துணிச்சலான கேள்விகளை எழுப்பியிருக்கிறார் ஆசிரியர். மணிமேகலையை ஒரு துறவியாக, அறம் செய்வதற்காகவே வந்த தேவதையாக பார்த்திருப்போம். அவளுக்கும் காதல் வரும் என்பதை அழகாக காட்சிப்படுத்தியிருக்கிறது இந்நூல்.
காதல் காட்சிகளுக்காக ஆசிரியருக்கு தனிப் பாராட்டுகள். நல்லதொரு காதல் இரசிகர். எந்த இடத்திலும் விரசமில்லாமல், கண்ணியம் தவறாமல், படிக்கும் யாராக இருந்தாலும் நிச்சயம் உள்ளூர குளுகுளு தென்றல் வீசிப்போகும். இன்னும் சொல்லப்போனால் மணிமேகலை காதல் உணரும் காட்சிகள் அற்புதம்.
எழுத்துநடை பற்றி பாராட்டியே ஆகவேண்டும். நிகழ்காலத்தில் அனு ஆதர்ஷ் பேசும் இயல்பான பேச்சு வழக்காகட்டும், பழைய பூம்புகாருக்கு சென்றவுடன் அங்கிருப்பவர்கள் பேசும் செந்தமிழ் நடையாகட்டும். குழப்பமில்லாமல், இவர் பேசினால் இப்படிதான் இருக்கும் என்று ரொம்பத் தெளிவாக எழுதியிருக்கிறார்.செந்தமிழும் படிக்கக் கடினமில்லாமல் எளிமையாகவே இருந்தது.
நடு நடுவே ஆசிரியர் வாசகனிடம் பேசும் இடங்கள் அழகு.
பாட்ட முழுசா படிக்காமதான வந்தீங்க, படிச்சுட்டு வாங்க அப்பதான் கதை சொல்வேன்
உண்மையிலேயே நான் படிக்காமல் தான் அடுத்த பக்கம் திருப்பியிருந்தேன், அப்புறம் மீற முடியுமா மீண்டும் படிச்சுட்டுதான் வந்தேன். அந்த இடம் ரொம்ப அழகா ஆசிரியரோடு நம்மை ஒன்ற வைத்து விடுகிறது.
ரொம்ப உச்ச கட்ட பதற்றத்தில் கதை போய்க்கொண்டிருக்கும், அடுத்து வாழ்வா சாவா நிலை, அப்போ மித்ரன் சொல்வார்
என்னடா இஞ்ஜினியரிங் ப்ரபசர் மாதிரி பாதி சொல்லிட்டு மீதிய நீங்க பார்த்துக்கங்கனு சொல்லிட்டு போறீங்க
படிச்சுட்டு இரவு வாய்விட்டு சிரித்தேன்.
கதாப்பாத்திரங்களின் சின்னச்சின்ன உடல்மொழிகள், அசைவுகள், உணர்வுகளை எழுத்தில் கொண்டுவந்திருக்கிறார் ஆசிரியர். அதுதான் கதையை உயிரோட்டமுள்ளதாக மாற்றியிருக்கிறது. எந்த இடத்தில் எவ்வளவு தேவையோ அளவான வருணைனைகள் நம்மை நிகழ்விடத்தில் நிற்க வைக்கின்றன. அருமை.
பழைய பூம்புகாரில் நம்மையும் கைப்பிடித்து சுற்ற வைப்பது, கடலுக்குள் ஜெல்லி மீன்கள், பவளப்பாறை, ஆக்டோபஸ் என்று ஆழ்கடலை உணரவைத்து இந்திர நீலத்தை நம்மையும் தேட வைப்பது. அப்பாடா தப்பிச்சோம்டா சாமினு நினைச்சு வரும்போது திரும்பி ஒரு வில்லன்கிட்ட மாட்டிக்கிட்டதுனு விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாத சாகசப்பயணம். நான் ரொம்ப ரசித்தேன்.
சின்னச் சின்னதாக சில கேள்விகள் படிக்கும் போது தோன்றினாலும். அட போப்பா அங்கிட்டுனு அதையெல்லாம் உதறி கதை நம்மை உள்ளே இழுத்துக்கொள்கிறது.
ஆசிரியரின் எழுத்தில் மனதைப் பறிகொடுத்த வாசகியாக மனம் நிறைந்த அன்பும், பாராட்டுகளும், வாழ்த்துகளும். அடுத்த கதை எழுதினதும் எனக்கு முதல்ல சொல்லிடணும் ஆமா.
எழுத்தை ஒருபோதும் விட்டுவிடாதீர்கள் சகோ. நிறைய எழுதுங்கள். நிச்சயம் ஒரு நாள் உங்கள் எழுத்துகள் கவனம் பெறும்.
நல்ல புத்தகங்கள் நல்ல வாசகனால் மட்டுமே அடையாளம் காணப்படுகின்றன, நண்பர்கள் இப்புத்தகத்தை நிச்சயம் படித்துப் பாருங்கள், நல்லதொரு அனுபவமாக இருக்கும். சரியோ தவறோ எதுவானாலும் எழுத்தாளனிடம் விவாதியுங்கள். அங்கீகாரமும் பாராட்டும் மட்டுமே நல்ல எழுத்தினை வளர்த்தெடுக்கும்.
#இந்திரநீலமும் #இமைக்காஇரவுகளும்
#உனது_அடுத்த_படைப்பை_எதிர்பார்த்து_காத்திருக்கும்_வாசகர்