Balamurugan Thamarankottai
- Book reviews
- April 19, 2023
“இந்திர நீலமும் இமைக்கா இரவுகளும்”
வரலாற்றை மாற்றிய காதல் கதை
இந்த நாவல் இவரது முதல் படைப்பு போல இல்லை, பல புத்தகங்களை எழுதிய எழுத்தாளர் போல சிறப்பாக எழுதி இருக்கிறார். “வாழ்க்கையை எதிர்பாராத சம்பவங்களின் தொகுப்பு தான். சிலர் வாழ்க்கையில் மற்றும் கனவில் கூட நினைத்துப் பார்க்க முடியாத சம்பவங்கள் நடக்கும். அவற்றிற்கு நம்மை வேறொரு உலகிற்கே தூக்கி செல்லும் அளவுக்கு வல்லமை இருக்கும் .சில வேலைகளில் அவை வரலாற்றை புரட்டிப்போட்டு நிகழ்காலத்தின் போக்கையே மாற்றிவிடும்.
ஒரு பழங்கால பண்பாடை ஆய்வு செய்து கொண்டிருந்த அனன்யா வாழ்வில் அப்படிப்பட்ட சில சம்பவங்கள் நடக்கின்றன. அவள் அவற்றை எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறாள்?உண்மையிலேயே அவை எதிர்பாராமல் நடந்தவைவையா? எந்த வரலாற்றை மாற்றப் போகின்றன? இப்படி பல வினாக்களுக்கான விடை தேடும் இப்பயணத்தில் அனன்யா மற்றும் நண்பர்களுடன் நாம் இணைந்து கொள்ளப் போகிறோம்” என்ற முன்னுரையோடு இந்த நாவல் தொடங்குகிறது. இனி நாவலை பற்றி… தொல்லியல் துறையில் முனைவர் பட்டத்தை வாங்க துடிக்கும் அனன்யா, ஆரம்பத்தில் எதிரியாக இருந்து பின்பு திருமணத்திற்கு நிச்சயிக்கப்பட்ட அவளது காதலன் ஆதர்ஷ், மற்ற இரண்டு ஆய்வு மாணவர்களான மித்ரன் ,இனியா நால்வர் இன்னும் சிலருடன் தற்போதைய பூம்புகார்க்கு செல்கிறார்கள். அங்கு அனன்யாவுக்கு கிடைக்கும் இந்திர நீலக்கல் கப்பலில் பயணம் செய்து கொண்டிருக்கும் போது அவர்களை காலப் பயணத்தில் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பிருந்த காவிரிப் பூம்பட்டினம் என்ற இடத்தில் அந்த கால கட்டதிற்கே கொண்டு போய் சேர்க்கிறது. அங்கே மாதவியின் மகள் மணிமேகலை உறவினரால் திருமணம் செய்ய வற்புறுத்தப்பட, அவள் வேறொருவரை காதலிக்க, அவள் மறுத்து புத்த சந்நியாசியாக மாற முயற்சி செய்ய, அந்த நேரத்தில் இவர்கள் அங்கு செல்கிறார்கள். அனன்யாவிற்கும் மணிமேகலைக்கும் இருக்கும் உருவ வேறுபாடு பலவித குழப்பங்களை ஏற்படுத்துகிறது. அதேபோல ஆதர்ஷ் என்னும் ஆதிக்கும் மணிமேகலையின் காதலன் இளவரசனுக்கும் உருவ ஒற்றுமை ஒன்று போல இருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு இங்கே வந்த யவனர்களில் ஒருவர் இங்கே ஒரு யவனரை தங்க வைத்து அந்த இந்திர நீலக்கல்லுடன் அங்கு வருமாறு பணித்து செல்கிறார். நிகழ்காலத்தில் இருக்கும் ஒரு இந்திர நீலக்கல் கடந்த காலத்தில் காவிரிப்பூம்பட்டினத்தில் சுவரில் இருக்கும் ஒரு இந்திர நீலக்கல் இரண்டும் இணைந்தால் உலக நாடுகளில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்த யவனர் குழு முடிவு செய்து சதி திட்டம் தீட்டுகிறார்கள். அதற்கு இந்த நால்வரையும் வரை பயன்படுத்த நினைக்கிறார்கள். அதில் ஒருவர் திருப்புமுனை கதாப்பாத்திரம். முடிவு என்ன ஆனது? என்பதே இந்த நாவல் விறுவிறுப்பாக சொல்கிறது. கடந்த காலத்திலும்,நிகழ் காலத்திலும் காதலர்கள் இணைந்தார்களா ? என்பதை பல திருப்பத்தோடு நிறைவு செய்து இருக்கிறார் நூலாசிரியர் பிரதீபா சந்திரமோகன் அவர்கள். . இந்த நாவலில் சிறப்பு என்னவென்றால் முன் பின் கதை சொல்லும் நான் லீனியர் முறைப்படியும், அதே நேரத்தில் காலப்பயணம் பற்றிய கதையும் ஒன்றாக இணைந்து மிக அற்புதமாக படைக்கப்பட்டுள்ளது. சில நேரங்களில் புரியாது போல தோன்றினாலும் முன்பே கதையை சொல்லிவிட்டு பிறகு அதை சில இடங்களில் இணைத்து இருந்தாலும் குழப்பமில்லமல் வாசிக்க சுவாரஸ்யம் கூட்டுகிறது. கதை சொல்லும் போக்கிலேயே நாட்டின் நிலைமையை பகடி செய்வதும், பல வரலாற்று செய்திகளையும், இயற்பியல் காரணங்களையும் கூறியிருப்பது சிறப்பு. வித்தியாசத்தையும்,வரலாற்றையும் விரும்பும் அனைவரும் கண்டிப்பாக வாசிக்க வேண்டிய ஒரு தரமான நாவல் " இந்திர நீலமும் இமைக்கா இரவுகளும்" இந்நூல் ஆசிரியர் இன்னும் பல படைப்புகளை தமிழ் உலகுக்கு தரவேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன். நன்றி வாசிப்பை நேசிப்போம்.
**#இந்திரநீலமும் #இமைக்காஇரவுகளும்