கி.ரா அவர்களின் கன்னிமை - சிறுகதை

prathebascribbles
bookreview
கி.ரா அவர்களின் நாற்காலி சிறுகதைத் தொகுப்பில் இருந்த கன்னிமை சிறுகதை படித்தேன். ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு மாதிரி யோசனை தர, இது என்னவோ என்னை நானே பார்ப்பது போலிருந்தது.
கிமு கிபி போல, பெண்ணின் வாழ்வில் திமு திபி அதாவது திருமத்திற்கு முன், திருமணத்திற்குப் பின் என இரு பருவங்கள். அவ்விரு பருவத்திற்கும் இடையேயான வேறுபாடு மலையளவு என்று தான் சொல்லவேண்டும்.
அக்கதை எடுத்தாளும் நாச்சியார் கதாப்பாத்திரமாகவே என்னை நான் உணர்கிறேன். ஒரு சகோதரியின் மைக்ரோ மில்லி மீட்டர் மாறுதல்களையும் உணர்ந்து எழுத அவர் எந்தளவு சமூகத்தை உள்வாங்கியிருக்க வேண்டும் என்ற மலைப்பு தோன்றி மறைகிறது.
அவர் தன்னை கதைசொல்லி என்றே சொல்லிக்கொள்வார். உடலுக்குள் உயிரெங்கே என்று சொல்ல முடியாதது போல், அவர் கதைகளிலும் ஜீவன் இருக்கிறது. அது இங்கே தான் இருக்கிறதென்று கண்டுகொள்ள முடியாதபடி எல்லா சொற்களிலும் இழைந்து கொண்டிருக்கிறது.
தயாள குணம் கொண்டவள், எல்லோருக்கும் வயிறார படியளப்பவள், புன்னகை முகமே கொண்டவள், அழகிய பாடல்கள் படிப்பவள், வீட்டிலிருந்தபடி மனம் விரும்பும் துணி வேலைப்பாடுகள் செய்பவளாகிய நாச்சியாருக்கு கல்யாணமானது.
ஆண்டுகள் உருண்டோட, திருமணத்திற்கு முன்பு இருந்த நாச்சியாரை தேடும் கணவனுக்கு அவள் கிடைக்கவே இல்லை. பிள்ளைப் பேறும் குடும்பச் சுமைவிளைவும் அவள் இளகிய மனதை சம்மட்டிகொண்டு அடித்து இரும்பாக்கிவிட்டன. ஊர் கொண்டாடிய நாச்சியாரு இவளில்லையோ என்று தோன்றுமளவு மாறிப்போய்விட்டாள் என நினைக்கிறான்.
ஏனென்று தெரியவில்லை, திருமணம் முடிவானதும் பெண்கள் அந்நாளில் அழுது கரைவார்கள் என்று குறிப்பிடுகிறார். இப்போது வரை அது தொடரத்தான் செய்கிறது. அதுவே அவள் மாறத் தொடங்கிய புள்ளியாகவும் இருக்கலாம்.
நாச்சியார்களின் கன்னிமையில் இருந்த இனிமை எங்கே தொலைந்து போயிருக்கும்?? என்று சிந்திக்கும்போதே மனம் ஏதோ செய்கிறது. எங்கே தான் போயிருக்கும்…???
Pic - ஓவியர் இளையராஜா அவர்களுடையது❤️