” மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் மாலை 7.05 மணிக்கு கண்டோண்மண்டுக்கு வரும்… நாம 5.30 க்கு கேப் ஏறனும்… ஸோ தேவையான எல்லா விஷயமும் பேக் பண்ணிடு… சமைக்க வேண்டாம்… மறுபடியும் சொல்றேன் சமைக்க வேண்டாம். உன்னால ஒன் ஹவர்ல செய்யமுடியாது.. அங்க போய் பாத்துக்கலாம்” சொல்லிவிட்டு நகர்ந்தார் என்னவர்.
எனக்கு பல குழப்பங்கள்.. ஐந்து மாத குழந்தையை தூக்கி கொண்டு வந்து வெளியில் எங்கே சாப்பிட ?? அத்தோடு வீட்டில் இருக்கும் கருவேப்பிலை, தயிர், எலுமிச்சை பழம் வீணாகிவிடும் எனும் கவலை வேற.!!!
சரி திட்டு வாங்கினாலும் பரவாயில்லை என முக்கால் மணி நேரத்தில் எலுமிச்சை சாதம், கருவேப்பிலை துவையல், காபி,ரயிலில் குடிக்க லஸ்ஸி எல்லாம் செய்தாயிற்று…
வந்துபார்த்து நொந்துவிட்டு நேரமாகி போனதை சுட்டிக்காட்டினார். மணி நாலரை. பின்னர் அடித்து பிடித்து ஐந்தேகாலுக்குள் தயாரானோம் மூவரும். நான், அவர், குழந்தை…
அன்று அவர் work from home போட்டதால் கொஞ்சம் சவுகரியம். Ola வில் cab - book பண்ணிவிட்டு அரைமணி நேரம் காத்திருந்தோம். ஆனால் போக்குவரத்து நெரிசலுடன் மழையும் கூட்டணி போட்டு டிரைவரை திருப்பி அனுப்பியதால் அது கேன்சல்.!!!!!!
அடுத்த cab வந்து ஏறிய பின்னர் தான் நியாபகம் வந்தது மறுநாள் கர்நாடக தேர்தல்.!! காவலர்கள் எல்லோரும் தேர்தல் பாதுகாப்புக்கு சென்றுவிட்டதால் மழை கூட்டணி வென்றுவிட்டது.
மணி ஆறேகால். ரயில் நிலையம் வீட்டிலிருந்து 9 கி.மீ தூரம். சரியான நேரத்தில் ரயிலை பிடிப்போம் என்னும் நம்பிக்கை எனக்கு கொஞ்சம் குறைவாக இருந்தது. வழக்கம்போல் அவர்தான் என் நம்பிக்கைக்கு டானிக் தந்தார்.
இருபது நிமிடம் வரை எல்லாம் நன்றாகவே நடந்தது. வெளிநாட்டில் வசிக்கும் உறவினர் ஒருவருடன் தொலைபேசியில் பேசிக்கொண்டு இருந்தோம். திடீரென அழைப்பு துண்டிக்கப்பட்டது. மறுபடியும் முயன்றும் லைன் கிடைக்கவில்லை.
அப்போது தான் கார் கண்ணாடி வழியே வெளியில் மின்னலின் தாண்டவம் தென்பட்டது. கல்கி பொன்னியின் செல்வன் நாவலில் நந்தினியின் கோபம் பற்றி வருணிப்பது போல, மின்னல் கோர சௌந்தர்யத்துடன் பளீரென்று வான்வெளியை வெட்டித் துண்டுபண்ணிக்கொண்டு இருக்கிறது.
மழை நீர் திவிலைகள் கண்ணாடியை விழுங்காமல் தடுத்துவிட போராடி தோற்றுக்கொண்டிருந்தன வைப்பர்கள். தூறல் பெருமழையானது.
இப்போது ஆறு மணி ஐம்பது நிமிடங்கள் கடந்து கடிகாரம் ஓடிக்கொண்டிருந்தது. ஏழு ஐந்துக்கு ரயில். எங்கள் நிலையை விளக்கியதும் ஓட்டுனர் குறுக்கு வழிகள் பலவற்றில் புகுந்து வந்துகொண்டிருந்தார்…
எப்போதும் ஆசையாய் அனுபவித்து பாடல் கேட்டுக்கொண்டே வரும் வழி அது. இன்று ஏதோ கன்னட பண்பலை பாடியது கூட கேளாமல் மனம் நேரத்தை மெதுவாய் நகரச்சொன்னது. ஆனால் நகராமல் போனதோ நகர போக்குவரத்து.
படகு போல் காரோடும் வீதிகளில் படகு விட்டு தான் ஊர்போய் சேரவேண்டுமோ என்று எண்ணுமளவுக்கு சாலையெல்லாம் வெள்ளம். அருவிபோல் நீர் ஆர்ப்பரித்து கொட்டிக்கொண்டிருக்கிறது. என் மனமும் தான்…
இந்நேரம் ரயில் போயிருக்கும், உன் சமையலை தின்னும் தண்டனையோடு ஊருக்கும் போக முடியாமல் போனது என திட்டு வாங்கிக்கட்டிக்கொள்ள போகிறோம் என்று. ஆனாலும் திடமாய் முகத்தை வைத்துக்கொண்டேன். பயத்தை வெளில காட்ட முடியாது பாருங்க…!!
அவ்வப்போது IRCTC வெப்சைட் பக்கம் போய் ரயிலின் தற்போதைய இருப்பிடம் அறிய முற்பட்டோம். கண்டோன்மென்டுக்கு முந்தைய ரயில் நிலையத்திற்கு மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் இன்னும் சற்று நேரத்தில் வந்து சேரும் என்று இருந்தது.
அங்கிருந்து ஏழு நிமிடம் தான் இங்கு வர… நாங்களும் சாதாரண நிலையில் சாலை இருந்தால் அமைதியாய் போய்விடலாம் என்றே சற்று நினைத்திருந்தோம். ஆனால் விதி வேறு கணக்குபோட்டு வைத்திருந்ததுபோல !!!
வீட்டில் ஏறும்போது தூங்கிய பிள்ளை பற்பல வாகனங்களின் இன்னிசைக் கச்சேரியில் விழித்துக்கொண்டான். போச்சுடா சாமி…!!!
அவனுக்கு கார் பயணங்கள் பிடிப்பதேயில்லை. ஒரேயிடத்தில் இருப்பது போல் தெரிகிறது போல.. ஐந்து மாத குழந்தை என்ன செய்யும் , அழுவதை தவிர… காரில் இருந்தாலும் இருட்டு, மழை, குளிர் என எதுவும் பழக்கப்படாதவை.
ஏதேதோ சொல்லி, மின்னல் மழையெல்லாம் காட்டி கதை பேசி செய்த சமாதானமெல்லாம் அடுத்த பத்தே நிமிடத்தில் வீண். மறுபடி அழுகை ஆரம்பம்.
உல்சூர் ஏரி வழியெல்லாம் கடும் வாகன நெரிசல். ஐந்து நிமிடத்தில் கடக்க வேண்டிய வார் மெமோரியல் வர அரைமணி நேரம் ஆனது. நீந்தி தான் சென்றன வாகனங்கள்.
என்னங்க..!! இப்போ ரயில் போயிருந்தா ஷாந்தி நகருக்கு கேப்லயே போயிடுவோமா இல்லை வீட்டுக்கு போயிடலமா?? நல்ல பஸ் இருக்குமா இல்லை SETCயில் போயிடுவோமா ?? போன்ற பல கேள்விகளை அடுக்கிக்கொண்டு வந்தேன்.
ஒன்றும் பிரச்சினை இல்லை.. இருக்க சாப்பாட்டை சாப்பிட்டு தூங்கினா காலையில் கார்ல கிளம்பிடுவோம்… வீட்டுக்கு போய்க்கலாம்… இந்த மழை பெய்யும் போதும் ரத்தம் ஆவியாகுற அளவுக்கு சூடாகாம வாப்பா என்றார்…
நேரம் ஏழரை… !!! எங்களுக்கும் தான்..!!!!! ஆனால் மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் இன்னும் வரவில்லை என்றே IRCTC சொல்லிக்கொண்டிருந்தது. போகும் வழியில் டிராஃபிக் இல்லையென்றால் இன்னும் பத்து நிமிடம்… சட்டுன்னு போயிடலாம்.. சொல்லிக்கொண்டே வந்தார் ஓட்டுநர்.
மழை விட்டிருந்தது. வாகனங்கள் ஒழுங்கின்றி அங்குமிங்கும் சிக்னல்களை மதிக்காமல் பறந்துகொண்டிருக்கின்றன. ஒரு நால்ரோட்டில் இருசக்கர வாகனங்கள் கோர்த்துக்கொண்டு சண்டை வேறு அரங்கேறிக்கொண்டிருந்தது. அந்த சூழ்நிலையிலும் புரியாத கன்னட வசைமொழிகளின் அர்த்தம் என்னவாக இருக்குமென்று யோசித்த மனதை கொட்டு போட்டு ஓரமாக அமர்த்தி வைத்தேன்.
மழை முழுதாக விட்டு விட்டது. சண்டையும் முடிந்துவிட்டது போல் தோன்றியது. வண்டி நகர்ந்தது என்று தோன்றியது. ஆனால் நெரிசல் நகரவில்லை. குழந்தை, கூடுதலாக ஆறு பைகள். ஆளுக்கு மூன்று பைகள் என பாகம் பிரிதாயிற்று. குழந்தையை Baby gearஇல் வைத்து நான் மாட்டிக்கொள்வதாய் முடிவு செய்தோம்.
சட்டென்று சாலை தெளிவானது. அதிக வாகனங்கள் தென்படவில்லை. ஒரு குறுக்குவழி… இரண்டு மூன்று வளைவுகள் சந்துகள்… இதோ வந்துட்டோம் என்றார் ஓட்டுநர். நம்பவே முடியவில்லை….
இறங்குவதற்கு பத்து நிமிடம் முன்பே தயாரானதால் தொபுக்கென்று காரை விட்டு குதித்து டிரைவருக்கு மிகப்பெரும் நன்றி ஒன்றை சொல்லி ஓட ஆரம்பித்தோம்.
அறிவிப்பு பலகை ஒன்றிலும் மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் பற்றி ஏதுமில்லை. வீட்டுக்கு நடையைக் கட்ட நினைத்த நேரத்தில்…..
Mayiladudhuthurai express will arrive shortly in Platform number 1 (மயிலாடுது துறை எக்ஸ்பிரஸ் இன்னும் சற்று நேரத்தில் ஒன்றாம் எண் பிளாட்பாரத்தில் வந்து சேரும்) என்னும் அறிவிப்பு காதில் விழுந்தது.
இதுவே சாதாரண நிலையில் எனில், ஊர் பெயரை ஒழுங்காய் சொல்லவில்லை என திட்டிக்கொண்டிருப்பேன். இப்போதோ அது மழை நேரத்தில் சாப்பிடும் சூடான பில்டர் காபி போல் இதமான உணர்வுதந்தது.
இதை சொல்லிக்கொண்டே திரும்பினால் நந்தினி பூத் அதேபோல் பில்டர் காபியுடன் வரவேற்றது. ஒரு அசட்டு புன்னகையுடன் கணவரை பார்க்க, கைகளில் இரண்டு கோப்பைகளுடன் கண்ணிமைத்தார்.
காபி மணத்தில் கரைந்தது, மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் மாயை…