இப்பதிவு, 2014 செப்டம்பர் மாதம் சென்ற டெல்லி பயணத்தின் சிறுபகுதி…என் பயண அனுபவத்தை நட்புகளுக்கு Whatsapp இல் அனுப்பிவைக்க நெய்யப்பட்டது…
ரயிலேர நடந்தபோது தோன்றியது… நாம் செல்வது இருக்கைக்கா… இல்லை வாழ்வின் இறுதிக்கா என… அத்தனை நீளமான இரயில்..
வடமாநில பயணம்… வசந்த காலமிதுவோ… மழையோ பனியோ குளிரோ… இந்தி மொழி புரிந்திடுமோ… இப்பயணம் இனிமைதருமோ…-என குழப்பங்களுடன் ஏறிய மனங்கள்… குறுகுறுப்பு மாறி சமரசமானது சகோதர புன்னகைகளில்…
மழையிங்கே அற்புதமாய் பெய்கிறது… அத்தனையும் அற்பமாக்கி நகர்கிறது இரயில்… ஆற்றுப்பாலங்கள் அமைதியாய் அழகுசெய்ய… கண்பார்க்கும் தூரமெல்லாம் சமவெளி… தொடுவான எல்லையில் ஒரு மலைத்தொடர்… வெண்பருத்தி வெடிப்பதும் வெள்ளைக்கோரை சிரிப்பதும் மனம் அகலா காட்சிகள் கண்ணூடே…
காற்றைத்தடுக்கும் சரக்கு ரயில்கள்… ஒளிக்கீற்றை அவ்வப்போது மட்டுமே நீட்டும் கருப்பு மேகங்கள்… இங்கே வண்ணங்கள் பன்னிரெண்டெனும் எண்ணங்கள் பறவையுதிர்த்த சிறகாய் காற்றில் பறந்திட… காணும் முகங்கள் ஒவ்வொன்றிலும் ஒன்றென… கணக்குபோட்டு களைத்துப் போனேன்… ஒருநூறு கண்டிருக்குமோ விரல் எண்ணிக்கை… வண்ணங்களே இத்தனையெனில் எண்ணங்கள் எத்தனையோ… ஒரே நாடாயினும் எத்தனை வேறுபாடுகள்… இருந்தாலும் இந்தியரெனும் உணர்வு எல்லோருள்ளும்…
இன்னுமொன்று குறிக்க எண்ணமிங்கே… நாட்டின் வேறோறு முகத்தையும் காணநேர்கிறது… இங்கே கைதட்டியும் கைகட்டியும் காசுகேட்கும் மனிதர்கள்… காரணமாயிரம் இருப்பினும் அவர்தம் கால்ரணமாற… வேண்டுதல் கொஞ்சம் கொண்டது நெஞ்சம்… அது நடக்கும்நாளே இந்தியா வல்லரசு…
நிலக்கரிக் குவியல் ஆங்காங்கே… நீளமான ரயில்கள் மேலே… வயல்கள் ஒவ்வொன்றிலும் மரங்கள் வரப்பின்மேலே… நாமோ வரப்பில் வைப்பதில்லை… வரவுக்கணக்கில் மட்டுமே வைக்கிறோம் மரத்தை…
தூரத்து மின்னிணைப்பு கோபுரம் கைகால் கொண்டு அருகில் வருதென எண்ணமிடுகிறேன் அவ்வப்பொழுது… என்கை யதுபோல் நீண்டால் தூரத்து மலைதாண்டி மிதக்கும் அம்மேகமள்ளி கைப்பைக்குள் வைப்பேன்… தென்னை மரமேதும் தென்படவில்லை… கோவில் கோபுரங்கள் நம்மூர் போலில்லை… எனினும் வேற்றுமையேதும் தென்படவில்லை எந்நாட்டிலே..