மழைக்கால மாலை…

மாலையின் கோப்பை தேநீர் ஒன்றோடு... மனமயங்கிடுவேன் உன்னோடு...

உன்னோடிணையும் பயணமது... உயிருக்கிதமான தருணமாம்...

வெற்றிடமெல்லாம் தண்ணீர்கொண்டு நிறைத்துவிட்டாய்... வெள்ளைத்தாளில் கூட கவிதை வெள்ளம் ஓடவிட்டாய்... நரம்புக்குள் புது நறுமணம் புகுத்திவிட்டாய்...

நான்வந்த நகரப்பேருந்தின் சின்னச் சின்ன துளைகள் வழி.. ஊசிபோல் நுழைகிறாய்... என் மனத்துள் புகுதல்போலவே....

குடைபிடிக்க அடம்பிடிக்கும் மழலையில்... குட்டிக் குட்டித் தூரலிசைச் சாரலில்... சன்னல் கம்பிகள் வழி துள்ளிடும் மழைப்பாடலில்... சாலை மரங்களில் பெய்யும் மறுமழையில்...

சில்லிட்ட சாரல்களில் எனை மறக்கிறேன்...-மழையில் சொல்லிடா வார்த்தைகளின் இதம் உணர்கிறேன்... கைத்தொட கலைந்துவிடும் துளியைப்போலவே... காற்று வந்து மோதிட வசமிழக்கிறேன்...